ADDED : ஜன 31, 2024 01:02 AM
சென்னை:'டாஸ்மாக்' கடைகளில், மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது. இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகளை நடத்துகிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும்; விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அதன்படி, உதாரணமாக, 100 ரூபாய்க்கு மது விற்றால், 83 ரூபாயும்; பீர் விற்றால், 73 ரூபாயும் வருவாய் கிடைக்கிறது.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால், தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாதாரண, நடுத்தர வகை, குவார்ட்டருக்கு 10 ரூபாயும்; உயர்தர குவார்ட்டருக்கு 20 ரூபாயும்; பீர் விலை 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2022 - 23ல் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை வாயிலாக, 10,401 கோடி ரூபாய்; மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் என, மொத்தம், 44,098 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.