21 தடுப்பணை, 9 அணைக்கட்டு ரூ.560 கோடியில் கட்ட திட்டம்
21 தடுப்பணை, 9 அணைக்கட்டு ரூ.560 கோடியில் கட்ட திட்டம்
21 தடுப்பணை, 9 அணைக்கட்டு ரூ.560 கோடியில் கட்ட திட்டம்
ADDED : மார் 25, 2025 02:01 AM

சென்னை : “தமிழகத்தில், 560 கோடி ரூபாயில் 21 தடுப்பணைகள், ஒன்பது அணைக்கட்டுகள் கட்டப்படும்,” என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
நீர்வளத் துறைக்கு, நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த கூடுதல் அலுவலக கட்டடம் சென்னையில் கட்டப்படும்
கோவை, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருச்சி, வேலுார் ஆகிய 15 மாவட்டங்களில் 21 இடங்களில், 374.95 கோடி ரூபாயில் தடுப்பணைகள் அமைக்கப்படும்
திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்துார், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒன்பது இடங்களில், 184.74 கோடி ரூபாயில் அணைக்கட்டுகள் அமைக்கப்படும்
சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில், நான்கு இடங்களில், ஆறுகளின் குறுக்கே 6.04 கோடி ரூபாயில், 'ரெகுலேட்டர்' எனப்படும் புதிய நீரொழுங்கிகள் அமைக்கப்படும்
கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நெல்லை, திருப்பூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், 17 இடங்களில், 130.80 கோடி ரூபாயில் பாலங்கள், தரை பாலங்கள் அமைக்கப்படும்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், 14 முன்னாள் ஜமீன் கால்வாய்கள், 9.34 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில், ஐந்து இடங்களில் 1.34 கோடி ரூபாயில், கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்
பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகள், 722.55 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
கோவை, தென்காசி, நெல்லை, திருப்பத்துார், திருப்பூர், திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 13 இடங்களில் உள்ள அணைகள், அணை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், புதுப்பித்தல் பணிகள், 19.80 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
ஈரோடு, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்துார், துாத்துக்குடி, திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 11 இடங்களில், 131.28 கோடி ரூபாயில், வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்
தமிழகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், 6.74 கோடி ரூபாயில், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்
'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டு, 130 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.