பாக் ஜலசந்தியில் 200 கடற்பசுக்கள் வனத்துறை தகவல்
பாக் ஜலசந்தியில் 200 கடற்பசுக்கள் வனத்துறை தகவல்
பாக் ஜலசந்தியில் 200 கடற்பசுக்கள் வனத்துறை தகவல்
ADDED : செப் 19, 2025 04:19 AM

சென்னை:வங்காள விரிகுடாவில், தமிழகத்தை ஒட்டிய பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில், 200 கடற்பசுக்கள் இருப்பது, 'ட்ரோன்' ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், கடற்பசுக்கள் அதிகம் காணப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இந்த உயிரினத்தை பாதுகாக்க, தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக, பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில், கடற்பசுக்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இங்கு கடற்பசுக்கள் பாதுகாப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இங்குள்ள, 500 சதுர கி.மீ., கடற்பகுதி கடற்பசுக்கள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், கடற்பசுக்கள் குறித்து அறிவதற்காக, இங்கு சிறப்பு மையம் அமைக்கும் பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின், இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத சிறிய விமானங்களை பயன்படுத்தி, கடற்பசுக்கள் நடமாட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், 200 கடற்பசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, உயர் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.