Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

ADDED : ஜூன் 24, 2025 12:28 PM


Google News
Latest Tamil News
-நமது நிருபர்-

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 833 துவக்கப்பள்ளிகள்; 99 நடுநிலைப்பள்ளி கள்; 108 உயர்நிலை; 98 மேல்நிலைப்பள்ளிகள் என, 1,138 பள்ளிகள் செயல்படுகின்றன.

செயல்பாடு

இப்பிரிவு மாணவர்களுக்காக, 1,143 விடுதிகளும் நடத்தப்படுகின்றன. ஆனாலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், இங்கு மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுவது இல்லை. எனவே, இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, அரசும் அதை ஏற்றது. ஆனாலும், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. 2021 - 22ம் கல்வியாண்டில், 95,013 மாணவர்கள் படித்தனர். தற்போது, 76,300 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

ஆசிரியர்கள் இல்லை!

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபின் கடந்த நான்காண்டில் மட்டும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2021 முதல் தற்போது வரை, 18,700 மாணவர்கள், இப்பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். அரசின் அலட்சியம் ஒருபுறம் இருந்தாலும், இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததும், மாணவர்களின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாகும்.



அவசியம்

தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கணினி ஆப்பரேட்டர் என, இப்பள்ளிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட 6,240 ஆசிரியர் பணியிடங்களில், 1,177 இடங்கள் காலியாக உள்ளன. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், பல இடங்களில் ஒரே ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும் கவனிக்கும் நிலை உள்ளது.

இதனால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அனைத்து வசதிகளும் கிடைக்க, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் விரைவில் இணைப்பது அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ளதை போல, பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளிலும், 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 'இவற்றை நிரப்ப அரசு முன்வராதது, வேதனையாக உள்ளது.

வேலுார் மாவட்டம் கீழ்வெள்ளம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் இல்லாததால், கீழ்மூணுார் பள்ளி ஆசிரியர்கள், சுழற்சி முறையில் கீழ்வெள்ளம் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். 'இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்துவிடும்' என்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை


கல்வியாண்டு- மாணவர்கள் எண்ணிக்கை

* 2021-22 - 95,013,

* 2022-23- 87,700,

* 2023-24- 81,100,

* 2024-25- 76,300

ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை


மாவட்டம்- பள்ளியின் எண்ணிக்கை

* விழுப்புரம்- 5

* கடலுார்- 6

* சிவகங்கை - 4

* திருநெல்வேலி - 6

* வேலுார்- 3

* தர்மபுரி- 2

* தஞ்சை - 7

நமது நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us