Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம் துணி உற்பத்தி, வர்த்தகம் பாதிப்பு

1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம் துணி உற்பத்தி, வர்த்தகம் பாதிப்பு

1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம் துணி உற்பத்தி, வர்த்தகம் பாதிப்பு

1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம் துணி உற்பத்தி, வர்த்தகம் பாதிப்பு

ADDED : மார் 19, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
சோமனுார்:கூலி உயர்வு கோரி கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று துவக்கினர். இதனால், துணி உற்பத்தி குறைந்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. 1.5 லட்சம் விசைத்தறிகள், ஒப்பந்த கூலி அடிப்படையில் இயக்கப்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும், லட்சக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நெசவு கூலியை உயர்த்தி தரக் கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதனால், பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி சங்க தலைவர் பூபதி, செயலாளர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:

கடந்தாண்டு ஜன., முதல் எட்டு முறை பேச்சு நடத்தப்பட்டது. அதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. அதனால், தீர்வு கிடைக்கவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து, மாவட்ட நிர்வாகங்கள் பேச்சு நடத்தி, சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு பெற்று தரக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளோம்.

சோமனுார், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், கண்ணம்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில், 1.5 லட்சம் சாதா விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

40 முறை மனு; பலன் இல்லை!

'கூலி உயர்வு ஏற்படுத்தி தர, முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்ச்ர்கள், இரு மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 40 க்கும் மேற்பட்ட முறை நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் மனுக்கள் அளித்தோம். ஆனால், எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என, கூட்டமைப்பினர் வேதனையுடன் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us