கமிஷனுக்காக தில்லுமுல்லு செய்தேன்: மோசடி வழக்கில் கைதான பெண் வாக்குமூலம்
கமிஷனுக்காக தில்லுமுல்லு செய்தேன்: மோசடி வழக்கில் கைதான பெண் வாக்குமூலம்
கமிஷனுக்காக தில்லுமுல்லு செய்தேன்: மோசடி வழக்கில் கைதான பெண் வாக்குமூலம்
UPDATED : ஜூன் 28, 2024 01:26 PM
ADDED : ஜூன் 28, 2024 02:30 AM

சென்னை: 'கமிஷன் தொகைக்காக, தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கான ரூபாய் வரை சுருட்டினேன்' என, நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை முகப்பேரில், ஆல்வின், 32, அவரது சகோதரர் ராபின், 28, ஆகியோர் ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். அவர்கள் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஆல்வின், ராபின் உட்பட, 11 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களில், சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஆசிக் ஆலுயுதீன், 32, புழல் பகுதியை சேர்ந்த லீமா ரோஸி ஆகியோரை போலீசார் இரண்டு நாள் காவலில் விசாரித்தனர். அப்போது, போலீசாரிடம் லீமா ரோஸி அளித்துள்ள வாக்குமூலம்:
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். என் கணவர் ரமேஷ், 2003ம் ஆண்டு இறந்து விட்டார். எங்களுக்கு, 10 மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்தபின், மகள்களுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன்.
அங்கு செயல்பட்ட, வின் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். உடன், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராபின், 28, பணியாற்றினார். அவருக்கு திருமணமாகவில்லை. எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
சகோதரர் ஆல்வினுடன் சேர்ந்து ராபின், முகப்பேரில் ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனம் துவங்கினார். நான் அந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் போல செயல்பட்டேன். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், தினமும், 1,500 ரூபாய் வீதம், 200 நாட்களுக்கு தருவர்.
பின், 50,000 ரூபாய் முதலீடு செய்தால், தினமும், 3,500 ரூபாய் தரப்படும். அதன்பின், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 9,000 ரூபாய் தரப்படும் என விதவிதமான திட்டங்களை அறிவித்தனர். முதலீட்டாளர்களை சேர்த்து விடும் நபர்களுக்கும் கமிஷன் தொகை கிடைக்கும்.
அவ்வாறு முதலீட்டாளர்களை சேர்த்து விட்டு கமிஷன் தொகை பெற்று வந்தேன். நானும், எனக்கு தெரிந்த நபர்களும், 60 நாட்களுக்கு முதலீட்டாளர்களை சேர்க்க தவறினால், கமிஷன் தொகை நின்று விடும்.
அதற்காக, தில்லுமுல்லு செய்து முதலீட்டாளர்களை சேர்த்து விட்டேன். என் பெயரில் முதலீடு செய்தால், கமிஷன் தொகை அதிகம் கிடைக்கும் என்று கூறியும், அவர்களை நம்ப வைத்து கோடிக்கணக்கில் சுருட்டினேன்.
நான் ராபினின் நெருங்கிய தோழி என்பதால், மார்க்கெட்டிங் மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. எனக்காக, வடபழனியில், ஏ.ஆர்.டி., கோல்டு லோன் என்ற நிறுவனத்தையும் துவக்கி ஒப்படைத்தார்.
அங்கு பணிபுரிய ஆட்களை நியமித்து விட்டு, ராபின் இருக்கும் இடத்திலேயே நானும் பணிபுரிந்து, முதலீட்டாளர்களை நம்ப வைத்து மோசடிக்கு உடந்தையாக இருந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.