'ஊட்டச்சத்து தோட்டம்' திட்டம் நிறுத்தமா?
'ஊட்டச்சத்து தோட்டம்' திட்டம் நிறுத்தமா?
'ஊட்டச்சத்து தோட்டம்' திட்டம் நிறுத்தமா?
ADDED : ஜூலை 10, 2024 01:12 AM
சென்னை:இடுபொருட்கள் வினியோகம் தாமதமாவதால், முதல்வரின் ஊட்டச்சத்து தோட்ட திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
நகர்ப்புறங்களில் இயற்கையான காய்கறிகளை, வீட்டில் உள்ள காலி இடங்கள் மற்றும் மாடிகளில், தோட்டம் அமைத்து உற்பத்தி செய்யும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டது.
மானிய விலையில், இத்திட்டத்திற்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பழனிசாமி ஆட்சியிலும் இத்திட்டம் தொடர்ந்தது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், 'முதல்வரின் ஊட்டச்சத்து தோட்டம் திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 900 ரூபாய் மதிப்பிலான ஆறு செடி வளர்ப்பு பைகள், ஆறு வகையான காய்கறி விதைகள், தென்னை நார் கட்டி, இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, உயிர் உரம் உள்ளிட்டவை மானியத்தில், 225 ரூபாய்க்கு வழங்கப்பட்டன.
இத்திட்டத்திற்கு, 6.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்று கற்றாழை உள்ளிட்ட செடிகள், 25 ரூபாய்க்கு வழங்கப்பட்டன. இதற்கு, தனியாக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆடி மாதம் துவங்கவுள்ள நிலையில், வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு நகரப்பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், முதல்வரின் வீட்டுத் தோட்ட இடுபொருட்கள் வினியோகத்தை, இன்னும் தோட்டக்கலை துறை துவங்கவில்லை. இத்திட்டத்திற்கு அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. அதனால், திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.