கள்ளச்சாராய பிறப்பிடமான கல்வராயன்மலையில் தொழில் வளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
கள்ளச்சாராய பிறப்பிடமான கல்வராயன்மலையில் தொழில் வளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
கள்ளச்சாராய பிறப்பிடமான கல்வராயன்மலையில் தொழில் வளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
UPDATED : ஜூன் 24, 2024 06:26 PM
ADDED : ஜூன் 24, 2024 06:07 PM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் கட்டுப்படுத்த தொழில் வளம் அமைத்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வராயன்மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மலைப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம், கால்நடை பராமரிப்பு ஆகும். மேலும் வனப்பகுதியுடன் தொடர்புடைய விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், கடுக்காய் சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
இப்பகுதி கிராமங்களிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் மருத்துவ குணமுடைய டெர்மினாலியா செபுலா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மருத்துவத்திற்கு பயன்படும் கடுக்காய் மரங்கள் அதிகளவில் உள்ளன. சித்த மருத்துவம், பற்பொடி, பற்பசை தயாரித்தல் போன்றவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இயற்கை முறையில் தோல் பதனிடுவதிலும் முக்கிய பொருளாக கடுக்காய் பயன்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை 5 மாதங்கள் கடுக்காய் விளைகிறது.
மலையில் கடுகாய் சேரிக்கும் மக்கள், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததில் குறிப்பாக பெண்களுக்கு வருவாய் கிடைத்தது. இங்கு சேகரிக்கப்படும் கடுக்காய்கள் இடைத்தரகர்கள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மலைவாழ் மக்களிடம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடுகாய் சேகரிப்பில் ஈடுபடும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கல்வராயன்மலையில் அரசு சார்பில் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2017ம் ஆண்டு வனத்துறை சார்பில், கரியாலுார் படகு துறை அருகே கடுக்காய் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்த தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. கடுக்காய் சேகரிப்பில் மக்களை ஊக்கப்படுத்தி தொழிற்சாலையை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கிய கடுக்காய் தொழிற்சாலை பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.
இதற்கிடையே கடுக்காய் ஏற்றமதி அதிகரித்தால் வரும் காலங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் கடுக்காய்க்கு பற்றாக்குறை நிலை ஏற்படும் என்பதால், சாராய வியாபாரிகள் சதி செய்து தொழிற் சாலையை மறைமுகமாக மூட வைத்தனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையில் நிலம் வைத்திருப்பவர்கள் மானாவாரியில் மரவள்ளி, பருவ மழை காலங்களில் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். நிலம் இல்லாத மலைவாழ் மக்கள் பலர் பிழைப்பு தேடி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். ஊர் திருவிழா, பண்டிகை போன்ற முக்கிய நிகழ்வின் போது சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர்.
இயற்கை வளம் அதிகம் கொண்ட கல்வராயன்மலையில், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், உடல் உழைப்பு மிக்க மலைவாழ் மக்கள் பலரிடம் பணத்தாசை காட்டி, அவர்களை கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செம்மரம் வெட்டும் தொழிலுக்கும் ரகசியமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவர்களை பயன்படுத்திக் கொள்ளும் பெரும் வியாபாரிகள் மட்டுமே செல்வந்தர்களாக உயர்கின்றனரே தவிர, மலைவாழ் மக்கள் கடைசி வரை கூலி தொழிலாளியாகவே இருக்கின்றனர். சட்டவிரோத செயலில் தங்களது உடல் உழைப்பை அதிகளவு செலுத்துவது மட்டுமின்றி நாளடைவில் குற்றவாளியாகவும், சமூக விரோதியாக தள்ளப்படுகின்றனர். இதனால், அவர்களது வருங்கால சந்ததியினரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பூட்டிக் கிடக்கும் கடுகாய் தொழிற்சாலையை மீண்டும் திறந்து, ஊக்கப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். மலையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோரை கண்டறிந்து, விழிப்புணர்வு மூலம் அவர்களை நல்வழிப்படுத்திட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் கட்டுபடுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் வளம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.