கர்நாடகாவில் மழை கொட்டுமா? பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்
கர்நாடகாவில் மழை கொட்டுமா? பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்
கர்நாடகாவில் மழை கொட்டுமா? பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்
ADDED : ஜூலை 09, 2024 06:25 AM

சென்னை : காவிரி ஆணையத்திடம் நீர் கேட்டும் பலனில்லாததால், தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து, தமிழக அரசு காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், 2.25 டி.எம்.சி., மட்டுமே கிடைத்தது.
ஜூலையில் 31.24 டி.எம்.சி., நீர் கிடைக்க வேண்டும். கடந்த 4ம் தேதி நிலவரப்படி, 4.03 டி.எம்.சி., நீர் பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆனால், 0.58 டி.எம்.சி., மட்டுமே வந்துள்ளது. இதனால், 10 டி.எம்.சி., நீர் நிலுவை வைக்கப்பட்டு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் பாசனத்திற்கு நீர் திறந்திருக்க வேண்டும். அணையில் 12.2 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளதால், திறக்கப்படவில்லை.
இதற்கிடையில், ஜூன் மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில், தமிழகத்திற்கு முறைப்படி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. இதேநிலை நீடித்தால், ஜூலையில் நீர் திறப்பு கேள்விக்குறியாகி விடும்.
எனவே, டெல்டாவில் பயிர்களை காப்பாற்ற, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு துவங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தால், நீர் வரத்து அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சரியாகி விடும் எனக்கருதி, இம்மாதம் இறுதி வரை காத்திருக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.