Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'லிப்ட்'டுக்குள் சிக்கியவரை மீட்கும் போது கால் தவறி லிப்ட் பாதையில் விழுந்து பலி

'லிப்ட்'டுக்குள் சிக்கியவரை மீட்கும் போது கால் தவறி லிப்ட் பாதையில் விழுந்து பலி

'லிப்ட்'டுக்குள் சிக்கியவரை மீட்கும் போது கால் தவறி லிப்ட் பாதையில் விழுந்து பலி

'லிப்ட்'டுக்குள் சிக்கியவரை மீட்கும் போது கால் தவறி லிப்ட் பாதையில் விழுந்து பலி

ADDED : ஜூன் 30, 2024 01:38 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் 10 மாடியில் அமைந்துள்ளன. இங்கு மொத்தம் 1,920 வீடுகள் உள்ளன. இது, 2016ல் 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அப்போது, தரமற்ற கட்டட வேலை குறித்து பல புகார்களை குடியிருப்பு வாசிகள் முன் வைத்தனர். கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகளும் அவ்வப்போது உதிர்ந்து பீதியை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி., நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற பொருட்களை கொண்டு குடியிருப்பு கட்டப்பட்டதாக அறிக்கை வழங்கியது. இதையடுத்து குடியிருப்பில் மீண்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 'இ' பிளாக், எட்டாவது மாடியில் வசித்தவர் கணேசன், 60. குடியிருப்பின் வெளியே டிபன் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் வீட்டுக்கு, 'லிப்ட்'டில் சென்றார். அப்போது மின் கோளாறு ஏற்பட்டு ஏழாவது மாடியின் பாதியிலேயே 'லிப்ட்' நின்றது.

'லிப்ட்' ஆபரேட்டர் சாமுவேல் என்பவரிடம் குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து லிப்ட் மெக்கானிக் காளிராஜ் என்பவருடன் ஏழாவது மாடிக்கு சென்ற சாமுவேல், 'லிப்ட்' கதவை திறந்து, கணேசனை வெளியே குதிக்கும்படி கூறியுள்ளார்.

ஏழாவது மாடியின் மேற்பகுதியில் இருந்து, தரையில் குதிக்கும் போது, பதற்றத்தில் இருந்த கணேசன், கால் தவறி, லிப்ட் செல்லும் பாதைக்குள் விழுந்தார். அங்கிருந்து தரைதளத்தில் லிப்ட் நிற்கும் இடத்தில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனையில் கணேசன் இறந்தது உறுதியானது. பேசின்பிரிட்ஜ் போலீசார், கணேசன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us