சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா: கோர்ட் கேள்வி
சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா: கோர்ட் கேள்வி
சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா: கோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 16, 2024 05:48 AM

புதுடில்லி: 'சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது தான், எனினும் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்கக்கூடாது' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
'யு டியூபர்' சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக பெண் போலீசார் குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். பின், அவர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
மேலும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதை எதிர்த்து சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இதை தொடர்ந்து சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அமானுல்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த காரணத்தினால், தன் மகன் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 - 1ஏ, 21 மற்றும் 22ன் கீழ் பேச்சுரிமையை மீறும் செயல் என்றும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் அரசு தரப்பு இவ்வளவு கடுமை காட்டக் கூடாது. நீங்கள் சரியாக செயல்பட வேண்டும். ஒருவரை தடுப்பு காவலில் வைப்பது மிகவும் தீவிரமான விஷயம். சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா?
அவரது நடத்தை மன்னிக்க முடியாதது தான். ஆனாலும் அவருக்கு ஏன் இடைக்கால நிவாரணம் வழங்க கூடாது?
சவுக்கு சங்கரின் தாயார் மனு மீது, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். விசாரணை வரும் 18க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.