'ரெடிமேட்' இட்லி மாவு விற்பனை அதிகரிப்பால் சரிந்தது 'வெட் கிரைண்டர்' உற்பத்தி
'ரெடிமேட்' இட்லி மாவு விற்பனை அதிகரிப்பால் சரிந்தது 'வெட் கிரைண்டர்' உற்பத்தி
'ரெடிமேட்' இட்லி மாவு விற்பனை அதிகரிப்பால் சரிந்தது 'வெட் கிரைண்டர்' உற்பத்தி
ADDED : ஜூன் 01, 2024 03:44 AM

சென்னை: தமிழகத்தில், 'ரெடிமேட்' இட்லி மாவு விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு, 10 லட்சமாக இருந்த வெட் கிரைண்டர் உற்பத்தி, 4 லட்சமாக குறைந்துள்ளது. எனவே, அதன் மீதான ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக குறைக்கும்படி, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
சென்னை உட்பட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் இட்லி மாவு அரைத்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், கிலோ இட்லி மாவு விலை, 30 முதல் 35 ரூபாயாகவும்; மற்ற இடங்களில் கிலோ, 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தொழில் வாய்ப்பு
இதனால், வீடுகளில் கிரைண்டரில் மாவு அரைக்க தயக்கம் காட்டும் பலரும், மாவு கடைகளில் தேவைக்கு ஏற்ப அரை கிலோ, 1 கிலோ என, வாங்குகின்றனர். இந்த தொழிலில் அதிக சந்தை வாய்ப்பு உள்ளதால், தற்போது பல நுாறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் பெரிய நிறுவனங்களும், மாவு விற்பனையில் களமிறங்கியுள்ளன.
அவை தங்களின் மாவு வகைகளை விற்க, அங்காடிகளுக்கு குளிர்ப்பதன பெட்டிகளையும் வழங்குகின்றன. இதனால், பெரும்பாலானோர் வீடுகளில் கிரைண்டரில் மாவு அரைக்காமல், கடைகளில் வாங்கி வருகின்றனர். இதையடுத்து, கிரைண்டர் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாஸ்தா ராஜா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், 500 நிறுவனங்கள் வெட் கிரைண்டர் உற்பத்தியிலும், 300 நிறுவனங்கள் அதற்கு தேவையான உதிரிபாகங்களையும் தயாரிக்கின்றன. ஒரு நிறுவனத்தில், 10 முதல், 25 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கோவையில் இருந்து தமிழகம் மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வீடுகளில், 2 லிட்டர் கொள்ளளவு உடைய கிரைண்டரும்; மாவு அரைக்கும் ஆலைகளில், 40 - 60 லிட்டர் கொள்ளளவு உடைய கிரைண்டரும் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, இட்லி மாவு விற்கும் தொழிலில் சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதால், பலரும் கடைகளில் மாவு வாங்குகின்றனர். எனவே, வீடுகளில் கிரைண்டர் பயன்பாடு குறைந்துள்ளது.
இதனால், நிறுவனங்களால் ஆண்டுக்கு, 10 லட்சம் வெட் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை, 4 லட்சமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில், 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரி இருந்த போது கிரைண்டருக்கு, 5 சதவீதம் தான் வரி இருந்தது. 2017ல் ஜி.எஸ்.டி., அமல்படுத்திய போது, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
தயாரிப்பு பாதிப்பு
இதை குறைக்குமாறு வலியுறுத்தியதில், 2021ல், 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இது அதிகமாக இருப்பதாலும், பலர் கிரைண்டர் வாங்க தயங்குகின்றனர். கிரைண்டர் விற்பனை பாதிப்பால், அதன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும்.
சில மாவு கடைகளில், தரமற்ற மாவு வகைகளை விற்பதால், மக்களும் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாவு கடைகளில் ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.