ஆர்.டி.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி கல்குவாரி மேலாளர் மீது விஜிலென்ஸ் வழக்கு
ஆர்.டி.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி கல்குவாரி மேலாளர் மீது விஜிலென்ஸ் வழக்கு
ஆர்.டி.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி கல்குவாரி மேலாளர் மீது விஜிலென்ஸ் வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 07:47 PM
குடியாத்தம்:குடியாத்தம் அருகே, கிராவல் மண் எடுக்க ஆர்.டி.ஓ.வுக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற, கல்குவாரி மேலாளர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன், 40; வேலுாரில் தனியார் கல்குவாரி மேலாளர். இவர் அப்பகுதியில் உள்ள உறவினரது நிலத்தில் இருந்து கிராவல் மண் எடுக்க, குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமியிடம் கடந்த பிப்., 22 ல் மனு அளித்தார். அப்போது அனுமதி அளிக்க, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த சுபலட்சுமி, குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றினர். இதையடுத்து, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் வீட்டில், கடந்த, 8 ல் சோதனை நடத்தினர். அப்போது லஞ்சமாக கொடுக்க முயன்ற பணம் மற்றும் கிராவல் மண் எடுக்க, அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணம் ஆகியவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.