வன்னியர் மீது தி.மு.க.,வுக்கு வஞ்சம், வன்மம்: ராமதாஸ்..
வன்னியர் மீது தி.மு.க.,வுக்கு வஞ்சம், வன்மம்: ராமதாஸ்..
வன்னியர் மீது தி.மு.க.,வுக்கு வஞ்சம், வன்மம்: ராமதாஸ்..
ADDED : ஆக 02, 2024 02:41 AM

சென்னை: 'வன்னியர்கள் மீதுள்ள வஞ்சம், வன்மத்தால் தி.மு.க.,வுக்கு, 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க மனமில்லை' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, ஜூலை 11ல் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
'ஜாதிவாரி மக்கள்தொகை விபரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஆனால், இப்போது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது.
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை. மத்திய அரசும் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இல்லை.
எனவே, ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால், எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், 'நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன்' என்று, தமிழக அரசும், ஆணையமும் இணைந்து, வன்னியர் சமூக நீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.
வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.
இதை பாட்டாளி மக்கள் நன்கறிவர். காலம் வரும்போது, நன்றி மறந்த தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.