முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 02, 2024 06:17 AM
ADDED : ஜூலை 02, 2024 05:28 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அதன்பின் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் 123.7 அடி எட்டியுள்ளது.
நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவையும் நீர்வளத் துறையினர் வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது.
நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
அதனால் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை 600 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.