'மெரினாவிற்கு வருவோரை நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல் அதிகரிக்கும்'
'மெரினாவிற்கு வருவோரை நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல் அதிகரிக்கும்'
'மெரினாவிற்கு வருவோரை நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல் அதிகரிக்கும்'
ADDED : ஜூன் 08, 2024 01:37 AM
சென்னை:சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால், சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது என, உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, மெரினா கடற்கரைக்கு மக்கள் வருகின்றனர்.
'அவர்களை இரவு 10:00 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக்கூடாது எனக்கூறி போலீசார் அப்புறப்படுத்துகின்றனர். கடற்கரைக்கு வருபவர்களை, இரவு 10:00 மணிக்கு மேலும் அனுமதிக்க வேண்டும்; அவர்களை துன்புறுத்தக்கூடாது. இது தொடர்பாக போலீசாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்' என, கோரப்பட்டது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ''மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, நேர கட்டுப்பாடு இன்றி அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது; தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய பேர் தற்கொலை செய்துள்ளனர்.
“இரவு நேரங்களில், கடற்கரைக்கு வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நேர கட்டுப்பாடு இல்லாமல் அனுமதி வழங்க முடியாது.
''அத்துடன், இரவு நேரத்தில் மட்டும் வெளியே வரும் கடல் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பொது இடங்களில் கூடுவதற்கும், நேர கட்டுப்பாடுகள் விதிக்கவும், காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இம்மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது.
மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து, காவல்துறை முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.