ஒரு பணியிடத்திற்கு இரண்டு மாறுதல் உத்தரவுகள்: கல்வித்துறையில் கலந்தாய்வு குழப்பங்கள்
ஒரு பணியிடத்திற்கு இரண்டு மாறுதல் உத்தரவுகள்: கல்வித்துறையில் கலந்தாய்வு குழப்பங்கள்
ஒரு பணியிடத்திற்கு இரண்டு மாறுதல் உத்தரவுகள்: கல்வித்துறையில் கலந்தாய்வு குழப்பங்கள்
ADDED : ஜூலை 08, 2024 06:33 AM
மதுரை: உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றி (மாற்றுப்பணி) உத்தரவிடப்பட்ட நிலையில், அதே பள்ளிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியருக்கான கலந்தாய்விலும் மாறுதல் உத்தரவுகள் வழங்கியதால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பணியிடத்திற்கு இரண்டு உத்தரவுகளால் 'கல்வித்துறையில் என்னதான் நடக்கிறது' என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5546 உபரி ஆசிரியர்கள் இருந்தது கணக்கெடுக்கப்பட்டு, அவர்கள் ஆசிரியர் தேவையுள்ள உதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் காலி இடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான மாற்றுப்பணி (டெபுடேஷன்) வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 1ல் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது. தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர்களுக்கு கல்வி ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டத்திற்குள் என மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்தது. ஜூலை 6ல் இத்துறை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான (ஒன்றியத்திற்குள்) பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. அதில் ஏற்கனவே உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட இடங்களும் ஆன்லைனில் காண்பிக்கப்பட்டன. அந்த இடங்களை அரசு ஆசிரியர்களும் தேர்வு செய்தனர். அதற்கான மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் கூறியதாவது: பெரும்பாலான உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் மேலும் பணிநியமனங்கள் மேற்கொள்ள அதிகாரிகள் தான் ஆலோசனைகள் வழங்கி 'பலன்' பெறுகின்றனர். இதனால் தான் உபரி ஆசிரியர்கள் உருவாகின்றனர். அவர்களை உதவி பெறும் பள்ளிகளுக்கு பணிநிரவல், அரசு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்குவது என தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3 ஆண்டுகளுக்கான மாற்றுப்பணி உத்தரவுகளை உதவிபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கிய பின், அதே பள்ளிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தின் உச்சகட்டம். ஓரிடத்திற்கு இரண்டு உத்தரவுகள் வழங்கப்பட்டதால் யார் பணியில் தொடர வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் அருகில் உள்ள பள்ளிக்கு தான் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என இயக்குநர் அறிவுறுத்தினார். ஆனால் அவரது உத்தரவை பெரும்பாலான மாவட்ட அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதுபோல் ஆசிரியர் தேவையுள்ள பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகளுக்கு உரிய ஆசிரியர்களை நிரவல் செய்யவில்லை. தவறான தகவல்கள் அடிப்படையில் இத்துறை உயர் அதிகாரிகளின் செயல்முறைகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்றனர்.