Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ போலீஸ் விசாரணையில் மரணம் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

போலீஸ் விசாரணையில் மரணம் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

போலீஸ் விசாரணையில் மரணம் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

போலீஸ் விசாரணையில் மரணம் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : ஜூலை 02, 2024 09:45 PM


Google News
Latest Tamil News
மதுரை : துாத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் விசாரணையின்போது ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சம்பவத்தின்போது எஸ்.ஐ.,யாக இருந்தவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

திருநெல்வேலி சோமசுந்தரம். தென்காசி கே.வி.நல்லுார் போலீஸ் இஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவர் துாத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தபோது வின்சென்ட் உட்பட சிலர் மீது 1999 ல் வழக்கு பதியப்பட்டது. விசாரணையின் போது வின்சென்ட் இறந்தார். சோமசுந்தரம் உட்பட சில போலீசார் மீது வழக்கு பதியப்பட்டது.

சோமசுந்தரம், 'துாத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அங்கு முறையாக விசாரணை நடக்க வாய்ப்பில்லை. வேறு மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி: தாளமுத்துநகர் போலீசில் 1999 செப்.,17 மற்றும் 18 ல் பணியிலிருந்த போலீசாரின் சித்ரவதைகளால் வின்சென்ட் இறந்துள்ளார் என துாத்துக்குடி ஆர்.டி.ஓ.,விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது குற்றவியல் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை துவங்க அரசு முடிவு செய்தது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பின் இவ்வழக்கின் விசாரணையை மாற்றக்கோரி தற்போது இங்கு மனு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகும் நீதி வழங்க முடியவில்லை எனில், அது ஒட்டுமொத்த நீதி அமைப்பிற்கும் பின்னடைவாக இருக்கும். எத்தனை சாட்சிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தாமதம் சாட்சிகளின் நிலைப்பாட்டை சிதைத்திருக்கும்.

சாட்சிகள் ஜூன் 25 ல் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகினர். மனுதாரர் தாக்கல் செய்த இவ்வழக்கின் காரணமாக கீழமை நீதிமன்றத்தால் சாட்சிகளை முழுமையாக விசாரிக்க முடியவில்லை. இம்மனு தெளிவற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை மேலும் தொடரவிடாமல் தடுக்கும் நோக்கில் மனுதாரர் இங்கு மனு செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை கீழமை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.

விசாரணைக்காக ஜூன் 25ல் ஆஜரான சாட்சிகளுக்கு தலா ரூ.5000 ஐ அந்நீதிமன்றம் வழங்க வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் விசாரணையின்போது அனைத்து சாட்சிகளும் ஆஜராவதை துாத்துக்குடி ஆர்.டி.ஓ.,உறுதி செய்ய வேண்டும். விசாரணையை முடிந்தவரை விரைவாக 3 மாதங்களில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us