ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் தொடர்பு இல்லை சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் தொடர்பு இல்லை சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் தொடர்பு இல்லை சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தகவல்
ADDED : ஜூலை 06, 2024 11:43 PM
சென்னை:''பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, அவரது சகோதரர் வீரமணி அளித்த புகார் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
10 தனிப்படைகள்
குற்றவாளிகளை கைது செய்ய, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முன்னதாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் மொபைல் போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கொலை நடந்த மூன்று மணி நேரத்திலேயே கொலை குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை. கொலையாளிகளின் தாக்குதலில், ஆம்ஸ்ட்ராங் சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, கார் ஓட்டுனர் அப்துல் கனி ஆகியோரும் காயமடைந்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக, முக்கிய இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்து, தற்போது வெளியில் சொல்ல முடியாது.
கொலைக்கான காரணம் குறித்தும் தற்போது வெளிப்படையாக கூற முடியாது. பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சில சம்பவம் நடைபெற்றது. அதுபற்றியும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
4,000 ரவுடிகள்
ஆம்ஸ்ட்ராங்கிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை. சென்னையில், 'ஏ, பி, சி' என, மூன்று பிரிவுகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பட்டியலில், 4,000 ரவுடிகள் உள்ளனர். அவர்களில், 758 பேர் சிறையில் உள்ளனர். அதில், 'ஏ' பிரிவில் உள்ள ரவுடிகள் 64 பேரில், 24 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ல் 409 பேர்; 2022ல் 496 பேர்; 2023ல் 713 பேர்; இந்தாண்டு ஆறு மாதங்களில் 769 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள் மட்டும் 666 பேர்.
லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம், இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையில் கொலை குற்றங்கள் குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு 63 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 58 கொலைகள் நடந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்தி உள்ளே
கமிஷனர் மேலும் கூறியதாவது:
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு மீது எட்டு வழக்குகளும், திருமலை மீது ஏழு வழக்குகளும், திருவேங்கடம் மீது இரு வழக்குகளும் உள்ளன. அருள் மீது எந்த வழக்கும் இல்லை.
சந்தோஷ் மீது சித்துாரில் ஒரு வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அவை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டு விட்டன.
துப்பாக்கி லைசென்ஸ்
ஆம்ஸ்ட்ராங் பெயரில் துப்பாக்கி உரிமம் இருக்கிறது. அந்த உரிமத்தை, டிச., 31, 2027 வரை புதுப்பித்துள்ளார். தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசில் ஒப்படைத்து இருந்தார். தேர்தல் முடிந்த பின், ஜூன் 13ம் தேதி மீண்டும் துப்பாக்கியை வாங்கிக்கொண்டார்.
இவ்வாறு கூறினார்.