17 வரை கனமழை வாய்ப்பில்லை சூறாவளியால் மீனவர்களுக்கு தடை
17 வரை கனமழை வாய்ப்பில்லை சூறாவளியால் மீனவர்களுக்கு தடை
17 வரை கனமழை வாய்ப்பில்லை சூறாவளியால் மீனவர்களுக்கு தடை
ADDED : ஜூன் 12, 2024 12:49 AM
சென்னை:தமிழகம், புதுச்சேரியில், வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை; வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் செய்திக்குறிப்பு:
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, பந்தலுாரில், 7 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
குன்றத்துார், 4; அரியலுார், நாமக்கல் மங்களபுரம், மீனம்பாக்கம், மதுரவாயல், முகலிவாக்கம், பெருங்குடி, சங்கராபுரம், ஏற்காடு, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மாநிலங்களின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வரும் 17ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பில்லை. மிதமான மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை, வரும் 15ம் தேதி வரை, இயல்பு அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் ஆகியவற்றில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடியில், 39 டிகிரி செல்ஷியஸ், 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
மதுரை நகரம், மதுரை விமான நிலையம் 38 டிகிரி செல்ஷியஸ் என, 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.