புடிச்ச வீடும் போச்சு; கொடுத்த பணமும் போச்சு! குத்தகைதாரர்கள் அவதியோ அவதி
புடிச்ச வீடும் போச்சு; கொடுத்த பணமும் போச்சு! குத்தகைதாரர்கள் அவதியோ அவதி
புடிச்ச வீடும் போச்சு; கொடுத்த பணமும் போச்சு! குத்தகைதாரர்கள் அவதியோ அவதி
ADDED : ஜூலை 22, 2024 04:13 AM

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீடுகளை குத்தகைக்கு பெறுவோரை குறிவைத்து புதிய மோசடி நடப்பதாக, ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி வீடு வாங்குவோரில் பலரும் வீட்டை வாடகைக்கு விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் குத்தகை முறையில், வீட்டை கொடுக்கின்றனர்.
ஒரு நபர், 5 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, நான்காண்டு குத்தகை என்ற அடிப்படையில் வீட்டை பெறுகிறார். இதில், நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், குத்தகை தொகையை திரும்ப பெற்று வெளியேறுவார் அல்லது குத்தகையை புதுப்பிப்பார்.
இவ்வாறு மொத்தமாக பணம் கொடுத்து, குத்தகைக்கு வீடு தேடுவோரை குறிவைத்து, புதிய மோசடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தவறான ஆவணங்கள் அடிப்படையில் வங்கிகளில், 50 முதல், 60 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, வீடு வாங்கும் நபர்கள், அதை குத்தகைக்கு விடுகின்றனர். இதற்காக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கின்றனர்.
இதன் பின் சில மாதங்களில், வங்கியில் வீட்டுக்கடனை செலுத்தாமல் தலைமறைவாகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி, அந்த வீட்டை கையகப்படுத்தி, சட்டப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறது.
இதில், அந்த வீட்டில் குத்தகை அடிப்படையில் குடியிருப்பவர் வெளியேற்றப்படுகிறார். அவர் செலுத்திய, 5 லட்சம் ரூபாய் பறிபோகிறது.
பல இடங்களில் மூத்த குடிமக்கள், குத்தகை அடிப்படையில் வீடு பெற்று ஏமாற்றப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. காவல் துறையிடம் புகார் செய்யும் வழிமுறை தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.
குத்தகைக்கு வீடு பெறுவோர், அதற்கான ஆவணத்தை முறையாக பதிவு செய்தால், சார் - பதிவாளர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிப்பார். இதனால், அந்த வீடு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பது வங்கிக்கு முன்கூட்டியே தெரியவரும்.
தவணை நிலுவை வைத்திருப்பவரின் வீடு என்றால், வங்கிகள் அது குறித்து சார் - -பதிவாளருக்கும், அவர் வாயிலாக மக்களுக்கும் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், சம்பந்தப்பட்ட வங்கியிடம் இருந்து பாதிக்கப்பட்டவர், நிவாரணம் கோர வாய்ப்பு இருக்கும்.
பொது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.