காட்சி பொருளானது தென்னை வணிக வளாகம்; இயந்திரம் வாங்கியதில் முறைகேடு என சர்ச்சை
காட்சி பொருளானது தென்னை வணிக வளாகம்; இயந்திரம் வாங்கியதில் முறைகேடு என சர்ச்சை
காட்சி பொருளானது தென்னை வணிக வளாகம்; இயந்திரம் வாங்கியதில் முறைகேடு என சர்ச்சை
ADDED : ஜூன் 03, 2024 04:04 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டையில் 20 ஏக்கரில், 8 கோடி ரூபாய் மதிப்பில், தென்னை வணிக வளாகம் கட்டப்பட்டு, 2011 பிப்., 27ல் மறைந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இதில், சேமிப்புக் கிடங்கு, கொப்பரை தரம் பிரிக்கும் பகுதி, எண்ணெய் பிழியும் ஆலை, சூரிய ஒளி கலம், ஏல அரங்கம், தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிக்கும் தொழிற் கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
அடுத்த சில மாதங்களிலேயே இது செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியது. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின், 2015 ஜூலை 12ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தென்னை வணிக வளாகத்தை பார்வையிட்டார்.
பின், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தென்னை வணிக வளாகத்தை பார்வையிட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, உறுதி அளித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு நிதியில் இருந்து தேங்காய் எண்ணெய் பதப்படுத்துதல், தேங்காய் துாள், குழந்தை பராமரிப்பு எண்ணெய், அழகுசாதன எண்ணெய் தயாரித்தலுக்கான இயந்திரங்கள், 5.20 கோடி ரூபாய், புதிய சேமிப்பு கிடங்கு, அணுகுசாலை, சுற்றுவேலி, நுழைவாயில் வளைவு என, 2.40 கோடி ரூபாய் என, 7.60 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஏப்., 27ல் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்.
ஆனால், இதுவரை தென்னை வணிகவளாகம் செயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக இருப்பதால், தென்னை விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தென்னை விவசாயி வீரசேனன் கூறியதாவது:
தென்னை வணிக வளாகத்தில் பொறுத்தப்பட்ட இயந்திரம் கர்நாடக மாநிலம், தும்கூரில் இருந்து வேறொரு தொழிற்சாலையில் இருந்த பழைய தொழில்நுட்பத்திலான பழமையான இயந்திரத்தை பொருத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், குழு ஒன்று ஆய்வு செய்தனர். அவர்களும் பெயர் அளவிற்கு பார்த்து சென்றனர்.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இயந்திரம் மூலம் 25,000 தேங்காய்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முடியும் என, கூறப்பட்டது.
ஆனால், தற்போதைய நிலையில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் நாள் ஒன்றுக்கு, 1,500 தேங்காய்கள் மட்டுமே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முடியும். மத்திய அரசு நிதியை முறைகேடு செய்து, விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் தென்னை வணிக வளாகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.