பஞ்சு பஞ்சாக போன ரூ.10 லட்சம் நிவாரண நிதி கடந்தாண்டு கள்ளச்சாராய உயிர் பலிகளில் கற்ற பாடம்
பஞ்சு பஞ்சாக போன ரூ.10 லட்சம் நிவாரண நிதி கடந்தாண்டு கள்ளச்சாராய உயிர் பலிகளில் கற்ற பாடம்
பஞ்சு பஞ்சாக போன ரூ.10 லட்சம் நிவாரண நிதி கடந்தாண்டு கள்ளச்சாராய உயிர் பலிகளில் கற்ற பாடம்
ADDED : ஜூன் 28, 2024 02:36 AM

கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, ஓராண்டுக்குள் இடம் தெரியாமல் போனது. வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருவதாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த மீனவ தொழிலாளர்கள், கடந்தாண்டு, மே 13ம் தேதி, அந்தப் பகுதியில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த, 'பாக்கெட்' கள்ளச்சாராயத்தைக் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த சோக நிகழ்வு, மக்களின் மனதில் இருந்து நீங்காத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில், மெத்தனால் கலந்த பாக்கெட் கள்ளச்சாராயம் குடித்து, 60 பேர் பலியாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, அரசு சார்பில் உடனடியாக, 10 லட்சம் ரூபாயும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
கண்டன குரல்
கள்ளச்சாராயம் என தெரிந்தே, அதைக் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது, கள்ளச்சாராய பலிகளை ஊக்குவிக்கும் செயல் என, கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன.
விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கடந்தாண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடும்பத்தினரின் வாழ்வாதார நிலை குறித்து, அவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரித்தோம்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
மீன்பிடித் தொழில் மற்றும் கூலி வேலைக்குச் செல்பவர்கள் சிலர் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மது பாட்டில் விலை அதிகம் என்பதால், கூலித் தொழிலாளர்கள், உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு கிடைக்கும் சாராயத்தை குடிக்கின்றனர். அந்த வகையில், மரக்காணம் அருகே கடந்தாண்டு, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது.
அப்போது அரசு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. அது உயிரிழந்தோரின் குடும்ப வாழ்வாதாரத்தை சரி செய்யவில்லை. அவர்கள் வறுமையில் தவித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே, ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரமைப்பதற்கான நிரந்தர தீர்வாக அமையும். சம்பவம் நடந்த பிறகு, உள்ளூர் பாக்கெட் சாராயம் விற்காத போதும், அருகில் மரக்காணம் மற்றும் புதுச்சேரி எல்லை பகுதியில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கின்றனர்.
மரக்காணம் சம்பவத்தில், 14 பேர் இறந்தனர்; 50 பேர் வரை உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அவர்களில், அடுத்த 6 மாதங்களில் ஐந்து பேர் வரை இறந்தனர். அவர்களுக்கு அரசு தரப்பில், எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை; இப்போதும், மூன்று பேர் கண் முற்றிலும் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர்.
அரசு கொடுத்த தொகை அந்த நேரத்தில், இறுதிச் சடங்கிற்கும், குடும்பக் கடனுக்கும் ஈடு செய்யப்பட்டது. ஓராண்டு தான் ஆகிறது; அந்த தொகை போன இடம் தெரியவில்லை; மீண்டும் வறுமைதான் சூழ்ந்துள்ளது.
கள்ளச்சாராய கொடுமையை உணர்ந்த ஒரு சிலர் மட்டுமே குடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால், பல இளைஞர்கள், மீண்டும் குடிக்கின்றனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அரசு கூறியது; ஆனால் வழங்கவில்லை.
வேலை வேண்டும்
பழைய சுனாமி குடியிருப்பில் வாழ்ந்து வருகிறோம்; புதிய இடமோ, வீடோ யாரும் வாங்கவில்லை; வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.
அரசு, 10 லட்சம் ரூபாய் வழங்கினாலும், அந்த அவசரகால செலவிற்கு தான் அது பயன் தருமே தவிர, உயிரிழப்புக்கு ஈடாகாது. குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவாத நிலைதான் உள்ளது.
நிரந்தர தீர்வாக கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும். பெற்றோரை இழந்தவர்கள் திருமணம் செய்யாமல், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர்.
கொரோனா காலத்தில், ஓராண்டாக இந்த பகுதியில், யாருமே சாராயம் குடிக்காமல் இருந்தனர். எனவே, சாராயம் குடிக்காமல் நம்மால் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது.
அரசு உறுதியாக இருந்து, கள்ளச்சாராயம், மது விற்பனையை முற்றிலும் தடுத்தால் தான், எங்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
உடலுக்கு தீங்கிழைக்காத, கள் இறக்குமதிக்கு, அனுமதிக்கலாம். மரக்காணம் சம்பவம் தான் கடைசி; இனி கள்ளச்சாராய உயிரிழப்பே இல்லை என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று அப்போதைக்கு வலியுறுத்தினோம். ஆனாலும், கள்ளக்குறிச்சியில் அடுத்த சம்பவம் அரங்கேறி விட்டது.
இவ்வாறு ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
- நமது நிருபர் குழு -