வரைவு வழிகாட்டி மதிப்பு கருத்து சொல்ல பதிவுத்துறை கெடு
வரைவு வழிகாட்டி மதிப்பு கருத்து சொல்ல பதிவுத்துறை கெடு
வரைவு வழிகாட்டி மதிப்பு கருத்து சொல்ல பதிவுத்துறை கெடு
ADDED : ஜூன் 25, 2024 12:13 AM

சென்னை: 'நிலங்களுக்கான வரைவு வழிகாட்டி மதிப்பு குறித்து ஆட்சேபங்கள் இருந்தால், வரும் 30ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ல் வெளியிடப்பட்டன. அதன்பின், 2017ல் மேற்கொள்ளப்பட்ட 33 சதவீத குறைப்பு, 2023ல் ரத்து செய்யப்பட்டது.
அதனால், 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள், சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
முடக்கம்
இந்நிலையில், வழிகாட்டி மதிப்புகளை ஒட்டு மொத்தமாக திருத்தும் பணியை பதிவுத்துறை மேற்கொண்டது. இதற்காக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளில் கோளாறு ஏற்பட்டதால், இந்த முயற்சி பாதியில் முடங்கியது.
அதேநேரத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 15 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டி மதிப்புகள், பதிவுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
திட்டம்
இதில், நிலங்களுக்கான மதிப்புகள், தெரு மற்றும் சர்வே எண் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அடுக்குமாடி கட்டட வீடுகளுக்கான கூட்டு மதிப்புகளும் மாற்றப்பட்டுள்ளன.
இணையதளத்தில் உள்ள இந்த வரைவு வழிகாட்டி மதிப்புகள் மீது ஆட்சேபங்கள் இருந்தால், அதை வரும் 30ம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என, பதிவுத்துறை அதிகாரிகள் அறிவித்துஉள்ளனர்.
கருத்து கேட்பு முடிந்ததும், புதிய மதிப்புகளை, ஜூலை 1 முதல் அமல்படுத்த, பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.