ADDED : ஜூலை 09, 2024 09:39 PM
அவனியாபுரம்:‛‛இனி வரக்கூடிய தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டுமென்றால், கட்சியை ஒருங்கிணைப்பது தான் ஒரே வழி,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன்; சசிகலாவும் சந்திக்கிறார். அவரது முயற்சியும் வெற்றி பெறும்.
ஒருபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்தது கிடையாது என பழனிசாமி கூறிய குற்றச்சாட்டிற்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளேன். அது போதுமானது என நினைக்கிறேன்.
பழனிசாமியைப் போல சர்வாதிகாரத்தனத்தோடு பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.
இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால், அ.தி.மு.க., ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்படி செய்யாமல் வெற்றி சாத்தியமாகாது. இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தும் கூட.
கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்துதாலும், அதை ஏற்க மாட்டேன் என என்னைக் குறித்து பழனிசாமி கூறியுள்ளார். என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்ல இவர் யார்? பொதுச்செயலர் வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். அ.தி.மு.க.,வுக்கு ஒரு தொண்டர் தான் தலைமை ஏற்க வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.