சட்டசபை கூட்டம் வரும் 24ல் துவக்கம்
சட்டசபை கூட்டம் வரும் 24ல் துவக்கம்
சட்டசபை கூட்டம் வரும் 24ல் துவக்கம்
ADDED : ஜூன் 08, 2024 01:36 AM
சென்னை:தமிழக சட்டசபை கூட்டம், வரும் 24ம் தேதி துவங்குகிறது.
தமிழக சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, இம்மாத இறுதியில் சட்டசபையை கூட்டி, துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தி, ஒப்புதல் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:
ஏற்கனவே பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்து முடிந்துள்ளது. மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்க, வரும் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு சட்டசபை கூட உள்ளது.
எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை நடத்துவது; எந்த தேதியில் எந்த துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பதை, சபை கூடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.