'வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்'
'வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்'
'வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்'
ADDED : ஜூலை 21, 2024 06:09 AM
சென்னை : வறுமை ஒழிப்பில் தமிழகம், இந்தியாவிலே முதலிடம் பெற்றுள்ளது. மேலும் 13 இனங்களில், நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில், தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது' என, மத்திய அரசின் நிடி ஆயோக் அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் நிடி ஆயோக் அமைப்பு, 2023 - 24ம் ஆண்டுக்கான, நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்த நான்காவது ஆய்வு அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
காலநிலை மாற்றம் - சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகியவற்றில், தமிழகம் முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.
பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், துாய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் போன்ற இனங்களில், தமிழகம் முன்னணி மாநிலமாக உயர்ந்துள்ளது.
மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம்; பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களால், குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து, வறுமை ஒழிப்பில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
மேலும், 11 இனங்களில் தமிழகம் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில், தேசிய சராசரியை விட அதிகமாக வளர்ச்சி பெற்று, முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில், தேசிய சராசரிக்கு இணையாக வளர்ச்சி பெற்று, தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.