மூவர் மர்ம கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
மூவர் மர்ம கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
மூவர் மர்ம கொலை வழக்கில் திடீர் திருப்பம்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஜூலை 18, 2024 03:08 AM

நெல்லிக்குப்பம்: கடலுார் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொன்று எரித்த வழக்கில், மூன்று நாட்களாக துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60. இவரது இளையமகன் சுமந்த்குமார், 37, ஐ.டி., நிறுவன ஊழியர். இரு மனைவியரை விவாகரத்து செய்தவர். இவரது இரண்டாவது மனைவி வழி மகன் இசாந்த், காராமணிக்குப்பத்தில் பாட்டி கமலீஸ்வரியுடன் தங்கி படித்து வந்தார்.
இவர்களின் வீடு கடந்த 13ம் தேதி முதல் பூட்டியிருந்த நிலையில், 15ம் தேதி துர்நாற்றம் வீசியது. போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, வீட்டிற்குள் கமலீஸ்வரி உள்ளிட்ட மூவரும் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எஸ்.பி., ராஜாராம் உத்தரவில், 7 தனிப்படை போலீசார், சுமந்த்குமாரின் இரண்டாவது மனைவியை நேரில் அழைத்து விசாரித்தனர். பின், சுமந்த்குமார் தற்போது வேலை செய்து வந்த ஹைதராபாத், ஏற்கனவே வேலை செய்த பெங்களூருவில் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
திடீர் திருப்பம்
தொடர் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் திணறிய நிலையில், நேற்று மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், கொலை நடந்த வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்து ஆய்வு செய்தனர். பின், வீட்டை சுற்றிலும் தடயங்களை தேடினர்.
அப்போது பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக்கறை இருந்ததை கண்ட போலீசார், தடயவியல் நிபுணர்களை வைத்து, சுவற்றில் இருந்த ரத்தக்கறை மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து போலீசார், பக்கத்து வீட்டை முழுமையாக ஆய்வு செய்து சில தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அந்த குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட, நான்கு பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.