நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம் அரசு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்
நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம் அரசு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்
நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்க மாட்டோம் அரசு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்
ADDED : மார் 12, 2025 03:33 AM

சென்னை:''தமிழகத்திற்கு 2,000 கோடி ரூபாய் இல்லை; நீங்கள் 10,000 கோடி ரூபாய் வழங்கினாலும், நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், அவர் பேசியதாவது:
'மும்மொழி கொள்கையை, அதாவது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால் தான், தமிழகத்திற்கு தர வேண்டிய 2,000 கோடி ரூபாயை தருவோம்' என்று திமிராக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் புகுத்துகிற கொள்கையால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மொத்தமாக அழிந்து ஒழிந்து விடும் என்பதால், அதை நாம் எதிர்க்கிறோம்.
கல்விக்குள் மாணவர்களை கொண்டு வர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல் திட்டங் களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கின்றன.
கல்வி தனியார்மயம், பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி, கல்வியில் மதவாதம், சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும், 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு, கல்வியில் மத்திய அரசின் அதிகார குவிப்பு போன்றவற்றுக்கு, தேசிய கல்வி கொள்கை வழி வகுக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம்.
இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் தான், உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும் என, 'பிளாக்மெயில்' செய்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அதனால் தான், 2,000 கோடி ரூபாய் இல்லை; நீங்கள், 10,000 கோடி ரூபாய் வழங்கினாலும், நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்கிறேன். தமிழகம், இவர்களின் சதிகளுக்கு எதிராக போராடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்; அராஜகவாதிகள் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். பேசிய அரை மணி நேரத்தில், அதை திரும்ப பெற வைத்திருக்கின்றனர் நம் எம்.பி.,க்கள்.
'மானம் அவன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு' என, கருணாநிதி எழுதினார். அந்த தலைவரின் வாரிசுகள் என்பதை, எம்.பி.,க்கள் லோக்சபாவில் எடுத்துக் காட்டியுள்ளனர்.
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் போல, பா.ஜ., அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல், தமிழகத்தின் உரிமைக்கு போராடுவோம் என்று நிரூபித்து இருக்கின்றனர். அங்கு, 40 பேர் என்ன செய்கின்றனர் என்று கேட்டவர்களுக்கு, நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது.
இதே போர்க்குணத்துடன் தமிழகத்துக்காக போராடுவோம்; இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சி நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் மக்கள் ஆதரவு தொடர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.