மாநில முதல்வர்களை அதிரவைத்த தேர்தல்; முழுமையாக அள்ளினார் ஸ்டாலின்
மாநில முதல்வர்களை அதிரவைத்த தேர்தல்; முழுமையாக அள்ளினார் ஸ்டாலின்
மாநில முதல்வர்களை அதிரவைத்த தேர்தல்; முழுமையாக அள்ளினார் ஸ்டாலின்
ADDED : ஜூன் 06, 2024 04:09 AM
லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தாலும், ஓரளவிற்கு மாநில ஆட்சிக்கான 'சர்டிபிகேட்' ஆகவும் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுவதுண்டு. இந்த தேர்தல் முடிவுகளை பார்த்தால் தமிழகம், மத்திய பிரதேசம், மேற்குவங்காளம், குஜராத் தவிர பெரும்பான்மையான பெரிய மாநிலங்களில், ஆளுங்கட்சிக்கு குறைவாகவே இடங்கள் கிடைத்துள்ளன.
அதிலும் மேற்கு வங்காளத்தில் மம்தா அதிக இடங்கள் பெற்றாலும்(29), பா.ஜ.,வும் 12 இடங்களை பெற்றது. குஜராத்திலும் காங்கிரசிற்கு ஆறுதலாக ஓரிடம் கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் முழுமையாக அள்ளினார் முதல்வர் ஸ்டாலின். இது முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கான மக்களின் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
இவரைப்போன்று முழுமையாக 29 தொகுதியையும் அள்ளியவர் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்(பா.ஜ.,).
பீகாரில் நிதீஷ் குமார் கூட்டணிக்கு 40 ல் 30 தான் கிடைத்தது. இப்படி பல பெரிய மாநிலங்களிலும் ஆளும் முதல்வர்களுக்கு பாதிக்கு பாதி அல்லது மூன்றில் ஒரு பகுதி என தான் இடங்கள் கிடைத்துள்ளன. மாநில முதல்வர்களிடையே பேரிடியை சந்தித்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். இங்குள்ள 20 தொகுதிகளில் இவரது மா.கம்யூ., கூட்டணிக்கு கிடைத்தது ஒரே தொகுதி தான். பல இடங்களில் இக்கூட்டணி வேட்பாளர்கள் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். எனவே முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பலத்த அடிவாங்கிய இன்னொரு முதல்வர் உ.பி.,யின் யோகி ஆதித்யநாத். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பெற்ற 62 தொகுதிகளுக்கு மேல், 70 வரை வாங்கி தருவார் என பா.ஜ., தலைமை எதிர்பார்த்த மாநிலத்தில் பாதி தொகுதிகள் கூட கிடைக்கவில்லை. 'எதிர்கால பிரதமர் வேட்பாளர்' என பேசப்பட்டவருக்கு பா.ஜ.,வில் இனி எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
சட்டசபைக்கும் தேர்தல் நடந்ததால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லோக்சபா-, சட்டசபை என இரண்டிலும் தோல்வி பெற்று இரட்டை சோகம் அடைந்த மாநில முதல்வராகியுள்ளார்.
நமது நிருபர்-