ஜூனில் தென்மேற்கு பருவமழை; இயல்பை விட 115% அதிகம்
ஜூனில் தென்மேற்கு பருவமழை; இயல்பை விட 115% அதிகம்
ஜூனில் தென்மேற்கு பருவமழை; இயல்பை விட 115% அதிகம்
ADDED : ஜூலை 02, 2024 05:55 AM

சென்னை: தென்மேற்கு பருவமழை கடந்த மாதத்தில் இயல்பை விட 115 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, ஜூன் முதல் தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழை துவங்கி நேற்று முன்தினத்துடன் ஒரு மாதம் முடியும் நிலையில் சராசரி அளவை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மாநில அளவில் சராசரியாக 5.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். அதற்கு பதில், 11.2 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 2.3 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 412 சதவீதம் அதிகமாக, 11.8 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில் 6.6 செ.மீ., பெய்ய வேண்டிய நிலையில், 200 சதவீதம் அதிகமாக, 20 செ.மீ., பெய்துள்ளது. கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தேனி, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், இயல்பான சராசரி அளவை விட, 200 சதவீதத்துக்கு அதிகமாக பெய்து உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி செருமுள்ளியில், 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று முதல், 7ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.