கார் ஏற்றி தந்தை கொலை சொத்து தகராறில் மகன் ஆத்திரம்
கார் ஏற்றி தந்தை கொலை சொத்து தகராறில் மகன் ஆத்திரம்
கார் ஏற்றி தந்தை கொலை சொத்து தகராறில் மகன் ஆத்திரம்
ADDED : ஜூன் 25, 2024 01:43 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, ஆலந்தா கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி, 72. இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தை மூன்று மாதங்களுக்கு முன் விற்பனை செய்தார்.
விவசாயி கருப்பசாமிக்கு சின்னத்துரை என்ற மகனும், ஐந்து மகள்களும் உள்ளனர். நிலம் விற்பனை தொடர்பாக கருப்பசாமிக்கும், அவரது மகன் சின்னத்துரை, 41, என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் அந்த நிலத்தை வாங்க வேண்டும் என சின்னத்துரை வலியுறுத்தி வந்தார்; ஆனால், கருப்பசாமி கேட்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை சவலாப்பேரி சாலையில் கருப்பசாமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால், டாடா சுமோ காரை ஓட்டிச் சென்ற சின்னத்துரை, தந்தை என்றும் பாராமல், அவர் மீது வேகமாக காரை மோதியதில் கருப்பசாமி பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், சிறிது நேரத்தில் கருப்பசாமி இறந்தார். விசாரணை நடத்திய புளியம்பட்டி போலீசார், தந்தையை கார் ஏற்றி கொன்றதாக, மகன் சின்னத்துரையை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.