ADDED : ஜூன் 18, 2024 12:17 AM
கோவில்பட்டி : கோயம்புத்துாரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் அதிகாலை 1:45 மணிக்கு கோவில்பட்டி வந்தது.
அப்போது இன்ஜினுக்கு அடுத்துள்ள முன்பதிவு செய்யப்படாத பெட்டி கழிப்பறையில் இருந்து திடீரென புகை வெளியேறி அப்பெட்டி முழுதும் பரவியது. பதறிய பயணியர் பெட்டியில் இருந்து அலறி அடித்து இறங்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் அப்பெட்டிக்குள் சென்று பார்த்தபோது, கழிப்பறை அருகே இருந்த தீ அணைக்கும் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரிந்தது.
போலீசார் மற்றும் ஊழியர்கள் அந்த கருவியை சரிசெய்தனர். இதையடுத்து பயணியர் மீண்டும் பயணித்தனர். இதனால், கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.