Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஸ்ரீவைகுண்டம் அருகே சவுடு மண் திருட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே சவுடு மண் திருட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே சவுடு மண் திருட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே சவுடு மண் திருட்டு

ADDED : ஜூலை 08, 2024 02:22 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பட்டா நிலங்களில் கனிமவளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியின்றி சவுடு மண் திருடப்படுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள செங்கல் சூளைகளுக்கு சவுடு மண் கடத்திச் செல்லப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில், கிடைக்கக் கூடிய சவுடு மண்ணில் தயாரிக்கப்படும் செங்கல்கள் தரமானதாக இருக்கும். இதனால், செங்கல் சூளைகள் நடத்தி வருவோர், சவுடு மண் எடுக்க கனிமவளத் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல், தனியார் பட்டா நிலங்களை குறி வைத்து மண் எடுக்கின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:


செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சவுடு மண்ணை, தனியார் பட்டா நிலத்தில் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கனிம தொகையை செலுத்த வேண்டும்.

முறையாக அனுமதி பெற காலதாமதமாகும் என்பதால், திருட்டுத் தனமாக சவுடு மண் கொள்ளையை இரவு நேரங்களில் 'ஹிட்டாச்சி' இயந்திரத்தை வைத்து அள்ளி, 'டாரஸ்' லாரிகளில் சேம்பர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சவுடு மண் கொள்ளை இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், குறு வட்ட வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார், போலீசார், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரின் மறைமுக ஒத்துழைப்புடன் நடக்கிறது. கனிம வளத்துறையில் அனுமதி பெற்றால், 1 மீட்டர் ஆழம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனுமதியின்றி, 15 அடி ஆழம் வரையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீபராங்குசநல்லுாரில் தனியார் பட்டா நிலத்தில் சவுடு மண் கொள்ளை நடக்கிறது.

இந்த மண் கொள்ளைக்கு காரணமான வருவாய் துறை, கனிமவளத் துறை, காவல் துறையினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் துவக்கும் முன் துவங்கிய அவலம்

தமிழகத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள், மண் பாண்டத் தொழிலாளர்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று முறைப்படி துவங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் 10 நாட்களில் அனுமதி வழங்கப்படும். ஆனால், துாத்துக்குடி மாவட்டத்தில் தற்போதே வண்டல் மண் எடுக்கும் பணியை விவசாயிகள் போர்வையில், கடத்தல் கும்பல் துவங்கிவிட்டது.இதுதொடர்பாக, துாத்துக்குடி சப் - கலெக்டர் பிரபு நேற்று தாசில்தார், வி.ஏ.ஓ.,க்களுக்கு 'வாட்ஸாப்' செய்தியில் கூறியிருப்பதாவது:திட்டத்தை முதல்வர் துவங்கி வைப்பதற்கு முன் யாரும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டாம். சில இடங்களில் மண் எடுக்க துவங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி, மண் எடுக்க துவங்கினால் உடனே நிறுத்தவும். மண் திருடி விற்கும் நோக்கில் யாரேனும் விண்ணப்பித்தால், அனுமதி அளிக்க வேண்டாம். சரள் மண் அள்ள அனுமதி இல்லை. அப்படி, யாரும் அனுமதி வழங்கி இருந்தால், உடனே அதை ரத்து செய்யவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us