அண்ணாமலைக்கு ஆதரவு அமோகம் அறுவடை செய்ய முடியாததால் சோகம்!
அண்ணாமலைக்கு ஆதரவு அமோகம் அறுவடை செய்ய முடியாததால் சோகம்!
அண்ணாமலைக்கு ஆதரவு அமோகம் அறுவடை செய்ய முடியாததால் சோகம்!
ADDED : ஜூன் 06, 2024 01:13 AM
கோவை லோக்சபா தொகுதியில் வெற்றி பெறுமளவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு இருந்தும், அந்த ஓட்டுக்களை அறுவடை செய்யும் அளவுக்கு கட்சிக்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததே, தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 68 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தோல்வி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறைந்தபட்சம் ஆறிலிருந்து ஏழு லட்சம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் நாலரை லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது, 2019 தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து வாங்கிய ஓட்டுக்களை விட, 62 ஆயிரத்து 125 ஓட்டுக்கள் அதிகமாகும்.
ஒப்பிட்டால் ஓட்டு குறைவு
அதே நேரத்தில், கடந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கும், இப்போது தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுக்களைச் சேர்த்தால், இப்போது தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள ஓட்டுக்கள் மிகக்குறைவாகும். அந்தத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் நின்ற மா.கம்யூ., வேட்பாளர் நடராஜனுக்கு, 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 ஓட்டுக்கள் கிடைத்தன.
மக்கள் நீதி மய்யம், தனியாக நின்று, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 104 ஓட்டுக்கள் வாங்கியிருந்தது. அத்துடன், சென்ற தேர்தலை விட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள், இந்தத் தேர்தலில் கூடுதலாகப் பதிவாகியிருந்தன. அதன்படி கணக்கிட்டால், எல்லாவற்றையும் சேர்த்து, தி.மு.க., வேட்பாளருக்கு ஏழு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது, 2019ல், நடராஜன் வாங்கியதை விட 2950 ஓட்டுக்கள் குறைவாகும்.
சென்ற தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., இப்போது தனியே நின்ற நிலையில், அக்கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 ஓட்டுக்கள் மட்டுமே வாங்கியுள்ளார்.
மடை மாறிய ஓட்டுக்கள்
இதிலிருந்து, தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் ஓட்டுக்களும், அ.தி.மு.க, ஓட்டுக்களும், பா.ஜ, வுக்கு மடை மாறியிருப்பது உறுதியாகத் தெரிகிறது.
அது மட்டுமின்றி, வளர்ச்சியை விரும்பும் நடுநிலையாளர்கள், அண்ணாமலைக்கு ஓட்டுப் போட்டிருப்பதும் தெளிவாகியுள்ளது.
இவர்களைத் தவிர்த்து, இன்னும் பல லட்சம் பேர், அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தனர். அதை வெளிப்படையாகவும் தெரிவித்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர், தங்களுடைய பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவில்லை. பா.ஜ., கட்சி நிர்வாகிகளும் அதைக் கண்டறிந்து, பெயர்களைச் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை.
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்த, அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்து ஓட்டுக்களாகப் பதிவு செய்யவும், கட்சி நிர்வாகிகள் முயற்சி எடுக்கவில்லை.
கூட்டமாக கோஷம் எழுப்புவது, சமூக ஊடகங்களில் சடுகுடு ஆடுவது மட்டுமே, கட்சிப்பணி என்று பலரும் இருந்தனர். தொகுதி முழுவதும் பூத் கமிட்டியே முறையாக அமைக்கப்படவில்லை.
பூத் கமிட்டிகளில் இருந்தவர்களுக்கும், தேர்தல் நடைமுறை, ஓட்டுப்பதிவு நாளில் செய்ய வேண்டியது, ஓட்டு எண்ணும்போது கவனிக்க வேண்டியது என, எதையுமே முறையாகக் கற்றுத் தரவில்லை.
இதில் திராவிடக் கட்சியினர், கரை கண்டவர்கள். அதனால் தான், அண்ணாமலைக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருந்தும், அதை ஓட்டுக்களாக அறுவடை செய்ய முடியவில்லை.
கடந்த 1998லேயே, கோவையில் பா.ஜ.,வுக்கு எம்.பி., கிடைத்த நிலையில், கால் நுாற்றாண்டு காலமாகியும், கட்சியில் கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
கட்சியில் தேர்தல் வேலைகள் தெரிந்திருந்த நிர்வாகிகளும், ஒருங்கிணைந்து வேலை செய்யவில்லை. இவை அனைத்தும் சேர்ந்தே, அண்ணாமலை என்கிற மலையைக் கீழே சாய்த்துள்ளன.
-நமது சிறப்பு நிருபர்-