துப்பாக்கிகளைக் கையாள போலீசாருக்கு மீண்டும் பயிற்சி
துப்பாக்கிகளைக் கையாள போலீசாருக்கு மீண்டும் பயிற்சி
துப்பாக்கிகளைக் கையாள போலீசாருக்கு மீண்டும் பயிற்சி
ADDED : ஜூலை 19, 2024 12:49 AM

சென்னை: ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும், போலீஸ் எஸ்.ஐ., - டி.எஸ்.பி.,க்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன், மாநில சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்ற, டேவிட்சன் தேவாசீர்வாதம் மண்டல வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். 'பணியின்போது எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கட்டாயம் துப்பாக்கி வைத்து இருக்க வேண்டும். ரோந்து போலீசார் லத்தி எடுத்துச் செல்ல வேண்டும்' என, அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் பணிபுரியும், 11,355 எஸ்.ஐ.,க்கள், 3,361 இன்ஸ்பெக்டர்கள், 978 டி.எஸ்.பி.,க்கள் என, 15, 694 பேருக்கு, சரகம் வாரியாக பிஸ்டல், ரைபிள் என, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
டி.எஸ்.பி.,க்களுக்கு இரண்டு துப்பாக்கிகள் தரப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களுக்கு துப்பாக்கிகள் தரப்பட்டு காவல் நிலையங்களில் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் தேவைப்படும்போது துப்பாக்கிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு.
பணியின் போது பலர் துப்பாக்கி வைத்துக் கொள்வதில் ஆர்வம் இன்றி இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்து இருந்தாலும், அதை மறந்து இருப்பர்.
அதனால், ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களின் கண் பார்வை பரிசோதிக்கப்பட்டு, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கியை எப்படி கையாள வேண்டும்; பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.