4,612 ஆலைகளில் கழிவு உற்பத்தி குறைப்பு
4,612 ஆலைகளில் கழிவு உற்பத்தி குறைப்பு
4,612 ஆலைகளில் கழிவு உற்பத்தி குறைப்பு
ADDED : ஜூலை 21, 2024 04:39 AM
சென்னை: தமிழகத்தில், 4,612 தொழிற்சாலைகளில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உற்பத்தியாவது குறைக்கப்பட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 4,612 தொழிற்சாலைகளில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் நிர்வாகங்களுக்கு, கழிவு கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில், அறிவியல் பூர்வ வழிமுறைகளைக் கடைபிடித்ததால், கழிவுகள் உற்பத்தியாவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி நிலையில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களே இதற்கு காரணம்.
மேலும், கழிவுகளை எரியூட்டலுக்கு நேரடியாக அனுப்பாமல், மறுசுழற்சிக்கான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. இதனால், கழிவுகள் எரிக்கப்படுவது வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பான புள்ளி விபரங்கள், விரைவில் வெளியிடப்படும். உற்பத்தி நிலையில் செலவை அதிகரிக்காமல், கழிவுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இதை இதர தொழிற்சாலைகளுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.