25 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா
25 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா
25 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா
ADDED : ஜூன் 05, 2024 01:06 AM
சென்னை:“இரண்டு எம்.பி.,க்களை பெற்றதன் வாயிலாக, மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது, கால் நுாற்றாண்டுக்கும் மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில், சிதம்பரத்தில் போட்டியிட வேண்டாம்; வேறு தொகுதியில் போட்டியிடுமாறு, பலரும் ஆலோசனை கூறினர்.
ஆனால், சிதம்பரம் தொகுதி என்பது என் தாய்மடி. எனவே, இங்கு போட்டியிடுவதில் உறுதியாக இருந்தேன். என் நம்பிக்கையை உறுதிப்படுத்திய சிதம்பரம் மக்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.
தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு பா.ஜ.,வின் வெற்றியை, 'இண்டியா' கூட்டணி தடுத்துள்ளது. மோடி அலை என்பது மாயை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக சிதம்பரம், விழுப்புரம் என, இரண்டு தொகுதிகளில் வி.சி., வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை, வி.சி., பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
கடந்த 1999 முதல் தேர்தல் களத்தில் இருக்கும் எங்களின் கால் நுாற்றாண்டு போராட்டத்திற்கு, உழைப்பிற்கு, மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது.
இவ்வாறு கூறினார்.