ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
ADDED : ஜூன் 23, 2024 11:42 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 22ல், 507 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்தியா - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அன்றிரவு அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.
மீனவர்கள் நாலாபுறமும் ஓடிய போது, தங்கச்சிமடம் ஜஸ்டின், ரெய்மண்ட், கெரின் ஆகியோர் படகில் இருந்த மீனவர்கள், வலையை இழுக்க தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், மூன்று படகையும் பிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள், 22 பேரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின், 22 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்ய மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். அதே நேரம், 120 சிறிய ரக விசைப்படகில் மீன்பிடிக்க செல்வர் என, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.