Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ரேபிஸ் நோய்: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

ரேபிஸ் நோய்: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

ரேபிஸ் நோய்: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

ரேபிஸ் நோய்: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

ADDED : ஜூன் 20, 2024 02:00 AM


Google News
சென்னை:தமிழகத்தில் இந்தாண்டில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்டு, 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

'ரேபிஸ்' தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு, ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களைப் பொறுத்தவரை பிறந்த முதல் ஆண்டில், இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசி போடுவது அவசியம்.

ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாகச் செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை அவை கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடந்தாண்டில், 22 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டில் மட்டும் இதுவரை, 16 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலர் டாக்டர் வடிவேலன் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும், 5,000க்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. அத்தகைய வைரசால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது.

இந்தாண்டில், கோவையில் மூவர்; திருப்பூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சியில் தலா இருவர்; ஆத்துார், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், சென்னையில் தலா ஒருவர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சிலர், நோய் பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுதும் உள்ள மருத்துவமனைகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தெருநாய்கள், செல்லப்பிராணி கடித்தவர்களுக்கு, நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28வது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

ஆழமான காயமாக இருந்தால், அந்த இடத்தில், 'இம்யூனோக்ளோபுலின்' தடுப்பூசி கூடுதலாகச் செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாமல், உரிய காலத்தில் சிகிச்சை பெறாமல் இருந்தவர்கள் தான் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us