எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 16, 2024 06:02 AM

சென்னை: மசூர் பருப்பை குறைந்த விலையில் மாநிலங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதால், அதை அந்தந்த மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கலாம் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உணவு துறை கடிதம் எழுதியது.
தடை வேண்டும்
இந்நிலையில், 'பொது வினியோக திட்டத்துக்கான இ- டெண்டரில், தமிழக அரசு மசூர் பருப்பை சேர்க்கவில்லை; கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டரை உறுதி செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, சென்னை, ராயபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஆறுமுகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜராகி, ''மசூர் பருப்பை கொள்முதல் செய்ய, மாநில அரசு மறுத்துள்ளது. மசூர் பருப்பில் கூடுதல் ஊட்டச்சத்து உள்ளது. ஆனால், அந்த பருப்பை கொள்முதல் செய்யாததற்கு உரிய காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. விலை குறைந்த இந்த பருப்பை வாங்கினால், மாநில அரசுக்கு மாதத்துக்கு 150 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்,'' என்றார்.
இதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தமிழக மக்கள் மசூர் பருப்பை விட, துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். அதனால், விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த பருப்பை மறுக்கவும் இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் பொது வினியோக திட்டத்தில் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து, இரண்டு வாரங்களில் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.