தென்னை விவசாயிகளுக்காக அரசு கையேடு வெளியீடு
தென்னை விவசாயிகளுக்காக அரசு கையேடு வெளியீடு
தென்னை விவசாயிகளுக்காக அரசு கையேடு வெளியீடு
ADDED : ஜூன் 08, 2024 01:42 AM

சென்னை:தென்னை சாகுபடி விவசாயிகளுக்காக, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உருவாக்கிய கையேடு, வெளியிடப்பட்டது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த, அமைச்சர் சாமிநாதன் தன் அனுபவத்தின் அடிப்படையில், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற கையேடு ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கையேட்டை வெளியிட்டார். சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விழாவில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
சில ஆண்டுகளாக சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதல், காண்டமிருக வண்டுகள் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய் என பல்வேறு நோய்கள், தென்னை மரத்தை அழிக்கின்றன. இதனால், தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
தென்னை விவசாயத்தை பாதுகாக்க, வேளாண் துறை அலுவலர்கள், மருந்துகளை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த கையேடு தயாரிக்கப்பட்டது. இதற்கு உதவிய பேராசிரியர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் சுப்பிரமணியன், அச்சுத்துறை கமிஷனர் ஷோபனா, செய்தித் துறை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.