தேனி நிதி நிறுவனம் கள்ளக்குறிச்சி கடலுாரில் ரூ.5 கோடி மோசடி புகார் அளித்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
தேனி நிதி நிறுவனம் கள்ளக்குறிச்சி கடலுாரில் ரூ.5 கோடி மோசடி புகார் அளித்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
தேனி நிதி நிறுவனம் கள்ளக்குறிச்சி கடலுாரில் ரூ.5 கோடி மோசடி புகார் அளித்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
ADDED : ஜூன் 25, 2024 01:31 AM
தேனி: தேனி மோசடி நிதிநிறுவனத்தின் கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட கிளைகளில் ரூ.5 கோடி வரை முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வந்தனர். இவர்களை கிளைகள் அமைந்துள்ள பகுதி போலீசில் புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனியில் தாய் தமிழ்நாடு அக்ரோ பர்பஸ் நிதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஓராண்டு முடிவில் ரூ.1.24 லட்சம் வழங்குவதாக முதலீட்டாளர்களிடம் நிதி சேகரித்தனர். இயக்குனர்களாக திருப்பூர் சரண்யாதேவி, சரவணன்பாலகுமார், தனபால் உள்ளனர்.
இந்நிறுவனத்தில் தேனி ரத்தினா நகர் மணிகண்டன் 37, மேலாளராகவும், மனைவி கார்த்திகா கணக்காளராகவும், பெரியகுளம் விஜயன், ராமகிருஷ்ணன் களப்பணியாளராகவும் பணியாற்றினர். இவர்களிடம் வடபுதுப்பட்டி முனியாண்டி கோயில் தெரு பிரேமா 11 தவணைகளில் ரூ.48.50 லட்சம் கொடுத்தார்.
பிரேமா நிறுவன இயக்குனராக தகுதி உள்ளவர் என ஆசை வார்த்தை கூறியதை நம்பி மேலும் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.73.50 லட்சத்தை முதலீடு செய்தார். இதற்கான பத்திரங்கள் பிரேமாவிற்கு வழங்கப்பட்டன. முதிர்வு காலமான ஓராண்டு முடிந்து பணம் கேட்ட பிரேமாவை, மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்து மோசடி செய்தார்.
தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட கிளை நிறுவனம் மூலம் 15க்கும் மேற்பட்டோர் ரூ.5 கோடி முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் முதலீடு பணத்தை திரும்ப பெற்று தர கோரி தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் கிளை நிறுவனம் அமைந்துள்ள இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.