தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செடிகள் உற்பத்தி முடக்கம்
தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செடிகள் உற்பத்தி முடக்கம்
தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செடிகள் உற்பத்தி முடக்கம்
ADDED : ஜூன் 01, 2024 03:46 AM
சென்னை: தோட்டக்கலை பண்ணைகளில், காய்கறி நடவு செடிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி முடங்கியுள்ளதால், பல ஏக்கர் நிலங்கள் சாகுபடியின்றி வீணடிக்கப்பட்டுள்ளன.
சென்னை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 34 மாவட்டங்களில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 79 பண்ணைகள் உள்ளன.
இதில், நீலகிரி மாவட்டம் பர்லியார் பண்ணை, 1871ம் ஆண்டு, கல்லார் பண்ணை, 1900, நஞ்சநாடு பண்ணை, 1917ல் அமைக்கப்பட்ட பழமையான பண்ணைகள். அதன்பின், 1961 முதல் பல பண்ணைகள் படிப்படியாக துவங்கப்பட்டு உள்ளன. இந்த, 79 பண்ணைகளின் மொத்த பரப்பளவு 6,775 ஏக்கர்.
காய்கறி செடிகள், பழமரக்கன்றுகள், பூச்செடிகள், பூமரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை தரமாக தயாரித்து, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு, இந்த பண்ணைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அ.தி.மு.க., ஆட்சியில், இப்பண்ணைகளில் முறையாக நடவு செடிகள், காய்கறிகள், கீரை விதைகள், மூலிகை செடிகள், பழமரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
விற்பனைக்கு போக எஞ்சிய செடிகளை பண்ணைகளில் நடவு செய்து காய்கறிகள், பழங்கள் மகசூல் பெறப்பட்டன. அவை ஏலம் அடிப்படையிலும், தினந்தோறும் அறுவடை செய்தும் விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு இப்பண்ணைகளில், 20 கோடி நடவு செடிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், நிதி பற்றாக்குறை, தொழிலாளர் குறைவு உள்ளிட்ட காரணங்களால், பல பண்ணைகளில் நடவு செடிகள் உற்பத்தி முடங்கியுள்ளது.
இப்பண்ணைகளில் காய்கறிகள் செடிகளை நடவு செய்திருந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரத்தில் பொதுமக்களுக்கு உதவியிருக்கலாம். தோட்டக்கலை துறைக்கும் உரிய வருவாய் கிடைத்திருக்கும். இதை வைத்து பண்ணை மேம்பாட்டு பணிகளை செய்திருக்கலாம்.
ஆனால், தோட்டக்கலை பண்ணைகளில், உற்பத்தியை பெருக்குவதற்கு மாவட்ட இணை இயக்குனர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. பல பண்ணைகளில் ஒப்புக்கு உற்பத்தி நடந்து வருகிறது.
கோடை முடிந்து, தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ள நிலையில், இனியாவது, தோட்டக்கலை பண்ணைகளை மேம்படுத்தி நடவு செடிகள் சாகுபடியையும், விதைகள் உற்பத்தியையும் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.