'முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்த மனு: வாபஸ் பெற கோருவது சரியானது அல்ல!'
'முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்த மனு: வாபஸ் பெற கோருவது சரியானது அல்ல!'
'முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்த மனு: வாபஸ் பெற கோருவது சரியானது அல்ல!'
ADDED : ஜூன் 27, 2024 07:09 AM

சென்னை: 'சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, சட்டசபை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற கோருவது நியாயமற்றது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ல், அ.தி.மு.க., ஆட்சியின்போது, சட்டசபைக்குள், தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீசை, உரிமைக் குழு அனுப்பியது.
இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, சட்டசபை செயலர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன. மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற அனுமதிக்கும்படி, அரசு தரப்பில் கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்து, இந்த நடைமுறை சரியானது அல்ல என்பதோடு, மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக, அரசிடம் இருந்து முறையான அறிவுறுத்தலை பெற்று தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை, ஜூலை 2க்கு தள்ளி வைக்கப்பட்டது.