நீட் விவகாரத்தில் கூட்டணி கட்சியினரே முதல்வருக்கு ஒத்துழைக்கவில்லை பழனிசாமி பேட்டி
நீட் விவகாரத்தில் கூட்டணி கட்சியினரே முதல்வருக்கு ஒத்துழைக்கவில்லை பழனிசாமி பேட்டி
நீட் விவகாரத்தில் கூட்டணி கட்சியினரே முதல்வருக்கு ஒத்துழைக்கவில்லை பழனிசாமி பேட்டி
ADDED : ஜூலை 03, 2024 02:32 AM

இடைப்பாடி:''நீட் விவகாரத்தில் 'இண்டியா' கூட்டணி கட்சியினரே, முதல்வருக்கு ஒத்துழைக்கவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில், அ.தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்த பின், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து பிரிவு, 56-ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தினேன். அதை மறுத்த, தி.மு.க., எங்களை பேச விடாமல் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.
இப்படி செய்துவிட்டு லோக்சபாவில், 'நீட்' தேர்வு விவகாரத்திற்கு அவையை ஒத்திவைக்க, தி.மு.க.,வினர் வலியுறுத்துகின்றனர். இது, தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
அதேநேரம், நீட் தேர்வு விவகாரத்தில், 'இண்டியா' கூட்டணி கட்சியினர், தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க மட்டும் வலியுறுத்துகின்றனர். ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகிறார்.'இண்டியா' கூட்டணி கட்சியினரே, நீட் விவகாரத்தில் முதல்வருக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், அத்தேர்வை மத்திய அரசு ரத்துசெய்ய, தி.மு.க., உறுப்பினர்கள் லோக்சபாவில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த வாய்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு கிடைத்திருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்போம்.
திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே, ஜாதி ரீதியான பிரச்னையால், நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலில், இரண்டு மாணவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.சமூக நீதி என்று மேடையில் மட்டும் பேசும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது, தொடர் கதையாகி உள்ளது.
கள்ளச்சாராய மரணத்துக்கு நீதி கேட்டு அ.தி.மு.க., நடத்திய உண்ணாவிரதம், நல்ல காரியம் எனக் கருதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு அளித்தார். இதேபோன்று நல்ல நோக்கத்துக்கு நாம் தமிழர் கட்சி உண்ணாவிரதம் நடத்தினால், அ.தி.மு.க.,வும் ஆதரவு கொடுக்கும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், பா.ம.க.,வினர், ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்துவது பெருமை தான். எங்கள் தலைவர்கள் புகைப்படங்களை பயன்படுத்தினால்தான் ஓட்டு கிடைக்கும் என எதிரணியினர் கூட நம்புகின்றனர்.
ஆனால், யாருக்கு ஓட்டு போடுவோம் என சொல்லமாட்டோம். நாடு முழுதும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்திய தண்டனை, குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.