'வந்தே பாரத்' ரயில்களுக்காக மற்ற ரயில்கள் 20 நிமிடம் தாமதம்
'வந்தே பாரத்' ரயில்களுக்காக மற்ற ரயில்கள் 20 நிமிடம் தாமதம்
'வந்தே பாரத்' ரயில்களுக்காக மற்ற ரயில்கள் 20 நிமிடம் தாமதம்
ADDED : ஜூன் 25, 2024 01:07 AM

சென்னை: மதுரை - பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை தயாராகி வருகிறது.
ஏற்கனவே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களால், அதே வழித்தடங்களில் செல்லும் மற்ற விரைவு ரயில்கள், 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால், அதே தடத்தில் செல்லும் மற்ற விரைவு ரயில்களின் இயக்கத்தில் தாமதம் கூடாது என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை - கோவை உட்பட பல்வேறு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்குவது வரவேற்கத்தக்கது. இதற்காக, அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களின் வேகம் அல்லது இயக்கத்தில் தாமதம் கூடாது.
வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்ப வேண்டிய மற்ற ரயில்கள், 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதை பார்க்க முடிகிறது.
எனவே, புதியதாக துவங்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்காக, அதே தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை குறைக்கக் கூடாது.
இவ்வாறு கூறினர்.
ரயில் ஓட்டுனர்கள் சிலர் கூறுகையில், 'வந்தே பாரத் இயக்கப்படும் வழித்தடங்களில், அதற்கு முன்னதாக செல்லும் மற்ற விரைவு ரயில்கள், சில முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் நிறுத்தப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது' என்றனர்.
ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புதிய ரயில் சேவை துவங்கும் போது, அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. பயணியருக்கான கூடுதல் வசதியை தான் பார்க்க வேண்டும். மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்காக, மற்ற ரயில்களின் வேகம் குறைக்கப்படாது' என்றனர்.