நீதிமன்ற ஆணையை பதிவு செய்ய சார்-பதிவாளர்களுக்கு உத்தரவு
நீதிமன்ற ஆணையை பதிவு செய்ய சார்-பதிவாளர்களுக்கு உத்தரவு
நீதிமன்ற ஆணையை பதிவு செய்ய சார்-பதிவாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 11, 2024 11:28 PM
சென்னை:'சொத்து உரிமை தொடர்பான வழக்குகளில், நீதிமன்ற ஆணைகளை பதிவு செய்ய சார் - பதிவாளர்கள் மறுக்கக்கூடாது' என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்து உரிமை தொடர்பான வழக்குகளில், சம்பந்தப்பட்ட சொத்து யாருக்கு சொந்தம் என்பதை, உரிமையியல் நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன.
அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்து, அதை முறையாக பதிவு செய்ய வேண்டும். அடுத்தடுத்த சொத்து பரிமாற்றங்கள், அதன்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நடைமுறை.
இந்நிலையில், சில வழக்குகளில் எதிர்தரப்பு ஆஜராகாத நிலையில், மனுதாரர் தரப்பு வாதத்தை மட்டும் ஏற்று, நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன.
இவ்வாறு ஒரு தரப்புக்காக வரும் உத்தரவுகளை, நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்நிலையில், சார் - பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
உரிமையியல் நீதிமன்றங்களில் சொத்து தொடர்பாக, ஒரு தரப்பினர் மட்டும் ஆஜராகி பெற்ற உத்தரவுகளை பதிவுக்கு ஏற்காமல், மொத்தமாக சார் - பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார் வந்துள்ளது. இதில், அனைத்து நீதிமன்ற ஆணைகளையும் மேலோட்டமாக பார்த்த நிலையிலேயே, சார் - பதிவாளர்கள் நிராகரிக்க கூடாது. நீதிமன்ற ஆணைகளை ஒருவர் பதிவுக்கு தாக்கல் செய்தால், அது ஒரு தரப்பினருக்காக பிறப்பிக்கப்பட்டதா என்பதை, முதலில் ஆய்வு செய்யுங்கள்.
அடுத்து என்ன காரணத்தால் அவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து, உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே நிராகரிக்க வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை முறையாக சார் - பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதை மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.