கோவை, நெல்லைக்கு புதிய மேயர்கள் இல்லை?
கோவை, நெல்லைக்கு புதிய மேயர்கள் இல்லை?
கோவை, நெல்லைக்கு புதிய மேயர்கள் இல்லை?
ADDED : ஜூலை 10, 2024 03:30 AM

கோவை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கட்சியினர் புகார்கள் காரணமாக, தி.மு.க., மேலிடம் எடுத்த நடவடிக்கையில், இவர்கள் பதவி இழந்துள்ளனர். அதனால், இந்த மாநகராட்சிகளில் புதிய மேயர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில், ஆளும் வட்டாரத்தில் புதிய தகவல் பரவுகிறது. அதாவது, புதிய மேயரை தேர்வு செய்வதற்கு பதிலாக, தற்போது இம்மாநகராட்சிகளின் துணை மேயர்களாக இருப்பவர்களுக்கு, மேயருக்கான அதிகாரங்களை அளித்து, மாநகராட்சியை வழிநடத்த சொல்லலாம் என, திட்டமிடப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம், சமீபத்தில், துணை மேயர் ராஜ் தலைமையில் நடத்தப்பட்டது. அதேபோல, கோவை மாநகராட்சி கூட்டமும், துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகளிலும் துணை மேயர்களே, பொறுப்பு மேயராக இருந்து மன்றக் கூட்டத்தை வழி நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
புதிய மேயரை, மறைமுக தேர்தல் வாயிலாக கவுன்சிலர்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்தல் நடத்தினால், கவுன்சிலர்கள் மத்தியில் குதிரை பேரம் ஏற்படும். கோஷ்டி மோதல்களும் தவிர்க்க முடியாததாகி விடும். அதனால், துணை மேயர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தந்து, மாநகராட்சி நிர்வாகம் சுமுகமாக செயல்பட வழி காணும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -