புதிய மினி பஸ் வரைவு திட்டம் வெளியீடு; ஜூலை 22ல் கருத்து கேட்பு
புதிய மினி பஸ் வரைவு திட்டம் வெளியீடு; ஜூலை 22ல் கருத்து கேட்பு
புதிய மினி பஸ் வரைவு திட்டம் வெளியீடு; ஜூலை 22ல் கருத்து கேட்பு
ADDED : ஜூன் 18, 2024 05:00 AM
சென்னை : புதிய மினி பஸ் வரைவு திட்டம், தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள புதிய மாற்றங்கள் குறித்து, ஜூலை 22ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
சென்னையை தவிர, மாவட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில் தற்போது, 2,875 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், புதிய மாற்றங்கள் செய்து, சேவையை விரிவுப்படுத்த, அரசு முடிவு செய்தது.
இதற்காக, புதிய மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் செய்து, புதிய மினி பஸ் வரைவு திட்டம், தமிழக அரசிதழிலில், 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, தற்போதுள்ள நிலவரப்படி, 20 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். அதில், 4 கி.மீ., ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். மீதமுள்ள, 16 கி.மீ., புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
புதிதாக கொண்டு வரப்படும் திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம். அதில், 30 சதவீதம் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். மீதமுள்ள 17 கி.மீ., துாரம் புதிய வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும்.
மேலும், மினி பஸ்கள் சென்றடையும் இடத்தில் இருந்து, அடுத்த 1 கி.மீ., துாரத்திற்குள் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, கோவில்கள், சந்தைகள் இருந்தால் மினி பஸ்கள் இயக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என்று, கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சென்னையின் உட்பகுதியில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி இல்லை. இருப்பினும், பயணியர் தேவையாக உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் மினி பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மினி பஸ் வரைவு திட்டம் குறித்து, அடுத்த, 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என, கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் காலை 10:00 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றும், அரசு தெரிவித்துள்ளது.